இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தா?

Mahendran
புதன், 12 மார்ச் 2025 (13:05 IST)
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத இறுதியில், அவர் இந்தியாவுக்கு வர இருப்பதாவும், அவருடன் அவரது மனைவி உஷா வான்ஸும்  வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணங்களுக்குப் பிறகு, இது வான்ஸின் இரண்டாவது சர்வதேச பயணம் ஆகும். முதலாவது வெளிநாட்டு பயணத்தின் போது, முனிச்சில் நடைபெற்ற மாநாட்டில், ஜே.டி. வான்ஸ் சட்டவிரோத குடியேறிகள், மத சுதந்திரம் மற்றும் ஐரோப்பிய அரசை கடுமையாக விமர்சித்தார். மேலும் ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் குறித்து அவர் ஆற்றிய உரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
 
அதேபோல் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில், பாரிசில் ஜே.டி. வான்ஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் ஆகியோருடன் காபி பகிர்ந்தனர். வான்ஸ் குழந்தைகளுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கியதோடு, அவர்களின் மகன் விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
 
டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப். 13 ஆம் தேதி அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில், அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவது மற்றும் உயர் கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், ஜே.டி. வான்ஸின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், வரி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்