கடந்த சில மாதங்களாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட மூவர் மீண்டும் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற போது, அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி பீராகார்கி என்ற பகுதியில் உள்ள காளி கோவில் முன்பு சந்தேகத்திற்கிடமாக மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினர். ஆனால், அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, அவர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதும், ஏற்கனவே இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக நாடு கடத்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, மீண்டும் அவர்களை வங்கதேசத்துக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் சந்தேகத்திற்கு உரியவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.