தெலுங்கில் சக்கைப் போடு போடும் தங்கலான்… இரண்டாவது வாரத்தில் தியேட்டர் எண்ணிக்கை அதிகரிப்பு!

vinoth
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (16:48 IST)
பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் முதல் நாளில் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. ஆனால் அதே நாளில் வெளியான டிமாண்டி காலணி படமும் சூப்பர் ஹிட் ஆனதால் தங்கலான் வசூல் இரண்டாவது வாரத்தில் குறைந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனாலும் விமர்சன ரீதியாக படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களும் பாராட்டிவருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு பேசிய இயக்குனர் பா ரஞ்சித் “தங்கலான் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடமாக இருந்தது. ஆனால் நாங்கள் வணிகக் காரணங்களுக்காக நேரத்தைக் குறைத்தோம்” எனக் கூறியுள்ளார்.

இன்று தமிழில் வாழை, கொட்டுக்காளி மற்றும் போகுமிடம் வெகுதூரமில்லை ஆகிய மூன்று படங்கள் ரிலீஸாகியுள்ள நிலையில் தங்கலான் ஓடும் தியேட்டர் எண்ணிக்கை பெரியளவில் குறைந்தது. மாறாக தெலுங்கில் தங்கலான் படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. முதல் வாரத்தில் 250 தியேட்டர்களில் மட்டும் ஓடிய தங்கலான் தெலுங்கு பதிப்பு இரண்டாவது வாரத்தில் 391 திரையரங்குகளில் ஓடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்