டெங்கு காய்ச்சலால் நர்சிங் படித்த பெண் உயிரிழப்பு.. வாலாஜாபேட்டை அருகே சோகம்..!

Siva
வியாழன், 19 டிசம்பர் 2024 (07:33 IST)
வாலாஜாபேட்டை அருகே டெங்கு காய்ச்சலால் நர்சிங் படித்த பெண் ஒருவர் மரணம் அடைந்திருப்பது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மழைக்காலம் வந்துவிட்டாலே டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் வாலாஜாபேட்டை தேவதானம் ரோடு என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது பிரியா என்ற நர்சிங் படித்த இளம் பெண் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இவர் ஒரு மருந்து கடையில் பணிபுரிந்து வந்த நிலையில், திடீரென ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

ஏற்கனவே இதே பகுதியில் 13 வயது மாணவன் ஒருவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், அங்கு பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வாலாஜாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினந்தோறும் மருத்துவமனைக்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


 Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்