அரசு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சிறுவனை எலி கடித்ததால் பலியானதாக கூறப்படுவது ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் அரசு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் கடந்த 11ஆம் தேதி சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த சிறுவனுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென சிறுவன் கதறி அழுததால் அவனது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த சிறுவனின் கால்களை பார்த்தபோது, கால் பாதத்தில் எலி கடித்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. பின்னர் மருத்துவ பணியாளர்களிடம் இதை தெரிவித்ததை அடுத்து, அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து மருத்துவமனை தரப்பினரிடம் கேட்டபோது, சிறுவனுக்கு ஜுரம் அதிகமாக இருந்ததாகவும், நிமோனியா காய்ச்சலால் தான் இறந்ததாகவும், எலி கடித்ததனால் இறக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.