கோவையில் டெங்கு காய்ச்சல் பரவும் விகிதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

Mahendran

புதன், 18 டிசம்பர் 2024 (16:00 IST)
கோவையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை இது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருவதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும், தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், வீடுகளில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மாலை நேரங்களில் மூடி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும், மருத்துவரின் பரிந்துரைப்படி தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிகுறித்துள்ளனர்.

குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்த நேரத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்