ஜப்பானிலிருந்து ஸ்பேஸ் ஒன் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும், இதனை அடுத்து அந்த ராக்கெட் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பானின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. மத்திய ஜப்பானில் உள்ள வகாயாமா என்ற பகுதியில் இருந்து நேற்று ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், அது பாயத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்றபோது அந்த ராக்கெட் வெடிக்க செய்யப்பட்டதாகவும், அந்த ராக்கெட் செயல்பாடு திருப்தியாக இல்லாததால் வெடிக்க செய்ததாகவும் ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் ஒன் நிறுவனத்தின் கெயரோஸ் 1 என்ற ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் தானாக வெடித்து சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இரண்டாவது முறையாகவும் ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் தோல்வி அடைந்திருப்பது விஞ்ஞானிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.