நாடாளுமன்றத்தில் இன்று, அமித்ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் காங்கிரஸ் எம்பிக்களும் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில், பாஜக எம்பிக்களும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தள்ளியதில் பாஜக எம்.பி. பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ் பூத் ஆகியோர் கீழே விழுந்ததாகவும், அவர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளன.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: "போராட்டம் நடத்திய பாஜக எம்.பிக்களை ராகுல் காந்தி தாக்கினார். அவர் தள்ளியதில் இரண்டு எம்.பிக்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளனர். மற்ற எம்.பிக்களுக்கு எதிராக உடல் பலத்தை காட்டும் அங்கீகாரத்தை ராகுலுக்கு யார் கொடுத்தது?
ராகுல் காந்தியின் கோபம், விரக்தி மற்றும் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம் அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது. ராகுல் காந்தி தனது செயலுக்காக காயமடைந்த எம்.பிக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.