வரும் 19ஆம் தேதி அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உச்சகட்ட பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, அமமுக உள்பட அரசியல் கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மக்களவை தேர்தல் முடிந்தாலும், பறக்கும் படையினர் இந்த நான்கு தொகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கூட மதுரையில் அமமுக பிரமுகர் தங்கத்தமிழ்ச்செலவன் தங்கியிருந்த விடுதியில் பறக்கும் படையினர் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வரும்போது தங்குவதற்கு தூத்துகுடியில் உள்ள ஒரு விடுதியில் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விடுதியில் சற்றுமுன் நுழைந்த தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
பணப்பட்டுவாடா புகார் காரணமாகவே தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிரடி சோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கும் விடுதியில் மட்டுமே பறக்கும் படையினர் சோதனை செய்து வருவதை அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.