கர்நாடக வெள்ளம்: ரூ.10 கோடி நிவாரண நிதி அளித்த இன்போசிஸ்

Webdunia
சனி, 10 ஆகஸ்ட் 2019 (09:23 IST)
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். கர்நாடக வெள்ள நிவாரண நிதியாக பொது மக்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக தலைநகர் பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இன்போசிஸ் நிறுவனம் ரூபாய் 10 கோடி நிவாரண நிதியாக அளித்துள்ளது. இதனை இன்போசிஸ் சேர்மன் சுதாமூர்த்தி அவர்கள் அறிவித்துள்ளார்.
 
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் வெள்ள மீட்பு பணிக்காக கடந்த ஆண்டு ரூபாய் 25 கோடி இன்ஃபோசிஸ் நிறுவனம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அம்மாநில மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருவது. இருப்பினும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பால் தான் இந்த நிறுவனம் இந்த அளவுக்கு பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
எனவே கர்நாடகத்துக்கு எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தாராளமாக நிதி வழங்கி அம்மாநில மக்களுக்கு பெரும் உதவி செய்துவரும் இன்போசிஸ் நிறுவனம் தற்போதும் அந்த உதவியை செய்துள்ளது என்று கர்நாடக மாநில மக்கள் புகழ்ந்து வருகின்றனர்
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு தாராளமாக வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியவர்களுடன் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மத்திய அரசு விரைவில் ஒரு பெரிய தொகையை நிவாரண நிதியாக கர்நாடக மாநிலத்துக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்