கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒரு வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. நன்கு பழுத்த பலாப்பழம் சாப்பிட்ட மூன்று பேருந்து ஓட்டுநர்களுக்கு மூச்சு பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர்கள் மது அருந்தியதாக கருவி காட்டியதால் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
தினந்தோறும் காலையில் நடத்தப்படும் மூச்சு பரிசோதனையில், இந்த மூன்று ஓட்டுநர்களுக்கும் இரத்த ஆல்கஹால் அளவு வரம்பை விட அதிகமாகக் காட்டியது. ஆனால், அவர்கள் மூவருமே ஒரு துளிகூட மது அருந்தவில்லை என்று திட்டவட்டமாக கூறினர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை செய்தபோது, அங்கு நன்கு பழுத்த ஒரு பலாப்பழம் இருந்தது கண்டறியப்பட்டது. நன்கு பழுத்த பலாப்பழம் நொதித்தல் திறன் கொண்டதாக இருப்பதால், அந்த பழத்தை சாப்பிட்டதால்தான் இரத்த ஆல்கஹால் அளவு அதிகமாக காட்டியது என்று தெரியவந்தது.
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்த, அந்தப்பலாப்பழத்தை மேலும் ஒரு ஓட்டுநருக்கு கொடுத்து சாப்பிட சொல்லி, அதன் பிறகு சோதனை செய்தனர். அப்போதும் அந்த ஓட்டுநரின் உடலில் ஆல்கஹால் இருப்பதை கருவி காட்டியது.
இதனை அடுத்து, முதல் மூன்று ஓட்டுநர்களும் பேருந்து இயக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, "இனிமேல் வாழ்க்கையில் பலாப்பழமே சாப்பிட மாட்டேன்" என்று அந்த மூன்று ஓட்டுநர்களும் சொன்னது வேடிக்கையுடன் கூடிய நிகழ்வாக அமைந்தது. பலாப்பழத்தால் ஏற்பட்ட இந்த விசித்திரமான அனுபவம், அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.