மத்திய பிரதேச மாநிலத்தில், தனது லிவ்-இன் பார்ட்னர் தன்னிடம் பொய் சொன்னதால் அவரையும் அவரது குழந்தையையும் கொன்றுவிட்டதாக, சுவரில் லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்த ஒரு வாலிபர் குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுஜ் விஸ்வகர்மா மற்றும் ராமசகி ஆகிய இருவரும் மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தனர். ராமசகிக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு மூன்று வயது குழந்தை ஒன்றும் இருந்தது. இந்த நிலையில், அனுஜ் மற்றும் ராமசகிக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்பட்டு வந்துள்ளன.
கொலையை நிகழ்த்திய பின்னர், அனுஜ் சுவரில் லிப்ஸ்டிக்கால் ஒரு செய்தியை எழுதியுள்ளார். அதில், "அவள் என்னிடம் பொய் சொன்னாள், அதனால் நான் அவளைக் கொன்றுவிட்டேன். அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது" என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த தகவல் காவல்துறையினருக்குத் தெரியவந்ததும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசகி மற்றும் அவரது குழந்தையின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர குற்றத்தை செய்த பின்னர், குற்றவாளி அனுஜ் இரண்டு சடலங்களுடனும் இரவு முழுவதும் அதே இடத்தில்தான் இருந்துள்ளார். தப்பிப்பதற்கான எந்த முயற்சியையும் அவர் செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.