கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தி, கைதட்டலுக்காக வெற்று அறிக்கைகளை வெளியிடுகிறார் என்றும் வயநாடு பிரச்சினை குறித்து அவர் எதுவும் பேசவில்லை என்றும் பாஜக சார்பில் போட்டியிடும் நவ்யா ஹரிதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, பத்தேரி தொகுதியில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வில் பேசிய அவர், "வனவிலங்குகள் தாக்குதல், ரயில்வே, மருத்துவம், பழங்குடியினர் பிரச்சினை உள்ளிட்ட பல சிக்கல்கள் வயநாடு தொகுதியில் உள்ள நிலையில், அவற்றை புரிந்து கொள்ளாமல், பிரியங்கா காந்தி வெறும் கைதட்டலுக்காக வெற்று அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார்.
பிரியங்கா இந்த விவகாரங்களில் நேர்மையாக இருந்தால் என்னுடன் விவாதத்திற்கு தயாராக இருக்க வேண்டும்," எனத் தெரிவித்தார். வயநாடு தேர்தலில் வளர்ச்சி என்பது முக்கிய பிரச்சினையாக இருக்கும் நிலையில், வளர்ச்சி குறித்த பிரியங்கா காந்தி எதுவும் பேசவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பிரியங்கா காந்தி, நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 பேர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்பதும், இங்கு வாக்குப்பதிவு வரும் 13ஆம் தேதி நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.