பிரதமர் மோடி சமீபத்தில் குவைத் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்ற நிலையில், அங்கு உள்ள தொழிலாளி ஒருவர் பிரதமரிடம், "நீங்கள் மெடிக்கல் லீவ் எடுப்பீர்களா?" என்று கேட்டார். அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்தது குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
குவைத் நாட்டில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர் பேசினார். இந்த சந்திப்பின்போது, குவைத் நாட்டை சேர்ந்த தொழிலாளி ஒருவர் "நீங்கள் மெடிக்கல் லீவ் எடுப்பீங்களா, சார்?" என்று கேட்டபோது, மோடி, "தொழிலாளர்களின் வியர்வை வாசனையே எனது மருந்து" என்று கூறினார்.
மேலும், இந்த உரையாடலின் போது ஒருவர் தன்னை தமிழர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டபோது, அவரிடம் மோடி "வணக்கம்" என்று தமிழில் கூறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விருது இதுவரை மிகச் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் குவைத் பயணத்தின் போது, இந்தியா மற்றும் குவைத் இடையே சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.