உக்ரைனில் அமைதி திரும்பும்னா.. பதவி விலகவும் தயார்! - ட்ரம்ப் கருத்துக்கு ஜெலன்ஸ்கி பதில்!

Prasanth Karthick
திங்கள், 24 பிப்ரவரி 2025 (08:56 IST)

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் நாட்டில் அமைதி திரும்ப தான் பதவி விலகவும் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

 

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அண்டை நாடான ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன.

 

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தான் உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறியிருந்தார். அதன்படி இரு நாடுகளிடமும் பேசி வரும் ட்ரம்ப் சமீபத்தில், உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இது மறைமுகமாக ஜெலன்ஸ்கியை அதிபர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் ட்ரம்ப்பின் கருத்து பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள ஜெலன்ஸ்கி, உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன், நேட்டோ அமைப்பிலும் உக்ரைன் சேர்த்துக் கொள்ளப்படுமானால் நான் பதவி விலகவும் தயார் என அறிவித்துள்ளார். ஆனால் போர் நிறுத்தம் தொடர்பான ரஷ்யாவின் நிலைபாட்டில், உக்ரைன் நேட்டோவில் இணையக் கூடாது என்பதே முக்கிய கருத்தாக இருப்பதால் இது சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்