கரூர் மாவட்டத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் மூலம் 12ஆம் வகுப்பு மாணவனுடன் பழகியதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட அந்த மாணவன், மாணவியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது.
அப்போது, இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றபோது, திடீரென மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய அந்த மாணவன் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்த வெள்ளத்தில் மாணவி அலறி அடித்து கொண்டு தப்பித்து வீட்டிற்கு வந்த மாணவி, தனது தந்தையிடம் நடந்ததை கூறிய நிலையில், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை தொடர்ந்து, காவல்துறையினர் அந்த மாணவனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாகவும், மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கழுத்தறுபட்ட மாணவி தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை மேம்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.