சசிகுமார், புகழ் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்த அயோத்தி திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆனது. அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணம் வரும் ஒரு குடும்பத்தில் நடக்கும் இறப்பு மற்றும் அது சம்மந்தமான பிரச்சனைகளை மனிதம் கலந்து சொல்லி இருக்கும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாகவே கொடுத்து வந்த சசிகுமாருக்கு இந்த படம் ஒரு கம்பேக் படமாக அமைந்துள்ளது.
இந்த படம் ரிலீஸானதில் இருந்து படத்தின் கதை தன்னுடையது என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. எழுத்தாளர்கள் நரன் மற்றும் மாதவராஜ் ஆகியோர் தங்கள் கதைகளில் இருந்து திருடிவிட்டதாக படத்தின் கதாசிரியர் எஸ் ராமகிருஷ்ணன் மேல் புகார் கூறினர்.
பின்னர் படத்தின் திரைக்கதையில் தான் பணியாற்றியதாகவும், ஆனால் தன்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்றும் சங்கர்தாஸ் என்பவர் குற்றச்சாட்டை வைத்தார். இந்நிலையில் இப்போது எழுத்தாளர் மில்லத் அகமது தான் எழுதியும் குறும்படமாகவும் எடுத்த கதையை திருடிதான் அயோத்தி படத்தின் கதையை எழுதியுள்ளனர் என ஒரு படவிழாவில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.