தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கலைஞர், எழுத்தாளர், நடிகர் மற்றும் இயக்குனர் என பல துறைகளில் செயல்பட்டு வந்த மணிகண்டனை கதாநாயகனாக அடையாளப்படுத்திய படம் என்றால் அது குட்னைட் படம்தான். அந்த படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்று அனைவரையும் கவர்ந்தது.
ஜெய்பீம், குட்னைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக உருவாகி வருகிறார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து மணிகண்டன் தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களுமான புஷ்கர் காயத்ரி தம்பதியினர் தயாரிக்க வுள்ளதாக அறிவித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் “நரை எழுதும் சுயசரிதை” என்ற படத்தை இயக்கி இருந்தார். அந்த படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.