ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம்.. வணிக ரீதியாக உதவும்.. ஸ்ரீதர் வேம்பு

Mahendran
புதன், 26 பிப்ரவரி 2025 (12:00 IST)
வணிக ரீதியான வளர்ச்சிக்கு தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஹிந்தி கற்றுக் கொள்வது புத்திசாலித்தனம் என்றும், ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மும்மொழி கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், ஹிந்தி உள்பட மூன்றாவது மொழிக்கு எதிர்ப்பாக திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் ஹிந்தியை கற்றுக் கொள்வதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹிந்தி கற்றுக் கொள்வது அவசியம் என்றும் புத்திசாலித்தனம் என்றும் ஜோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு வந்து பணி புரியும் பொறியாளர்கள் ஹிந்தி தெரியாமல் இருப்பது பெரும் குறையாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

டெல்லி, மும்பை போன்ற பகுதிகளில் பணியாற்றும் தன்னுடைய நிறுவன பொறியாளர்கள், ஹிந்தி தெரியாமல் கஷ்டப்படுவதாகவும், எங்கள் வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதும் இருப்பதால், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் ஹிந்தி தெரிந்தால் எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வணிகத்தின் பெரும்பகுதி டெல்லி, மும்பை, குஜராத் ஆகிய பகுதிகளில் இருப்பதால், வணிக வளர்ச்சிக்கு ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் ஹிந்தி கற்றுக் கொள்ளாதது ஒரு பெரும் குறையாகவே இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்