வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளிலும், காரைக்கால் பகுதியிலும் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனால், அதே நேரத்தில் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.