இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படவில்லை என்றும், ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் ஒரே மொழிக் கொள்கை தான் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
"இருமொழிக் கொள்கை வெற்றி பெறாவிட்டால் தான் மும்மொழி கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது மொழிக்கான தேவையில்லை," என அவர் கூறினார்.
மேலும், "ஹிந்தி பேசும் மாநிலங்களிலும் ஒரே மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. எந்த மாநிலத்திலும் மூன்று மொழி முறையாக பயிற்றுவிக்கப்படவில்லை. வட மாநிலங்களில் சில அரசு பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம் பேசும் ஆசிரியர்கள் உள்ளனர். ஒருவேளை மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டால், அது ஹிந்தியுடன் நெருக்கமான சமஸ்கிருதத்தை கற்பிக்க வழிவகுக்கும்," எனவும் அவர் கூறினார்.
மேலும், "மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் கூட மும்மொழிக் கொள்கை இல்லை. அங்கு ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுவதோடு, ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் இரண்டில் ஒன்றுதான் பாடமாக கற்பிக்கப்படுகிறது. தமிழைக் கூட கற்பிக்கவில்லை," என அவர் குற்றம் சாட்டினார்.
"தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் பயிற்று மொழியாகவும், இரண்டாவது மொழியாக ஆங்கிலம் பயன்பட்டு வருகிறது. ஹிந்தி விரும்பும் மாணவர்கள் அதை தனியாகக் கற்றுக்கொள்ள எந்த தடையும் இல்லை," என அவர் தெரிவித்தார்.