பிப்ரவரி 13ஆம் தேதி, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் நாடாளுமன்றத்தில் சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக, அவைகள் மார்ச் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி இன்று தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தொடரில், சாகாரி பல்கலைக்கழக மசோதா உள்பட சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் வரி விதிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. அதேபோல், வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தொடர்பான பரிந்துரைகள் நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஏற்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.