கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டும் பணியை நிறுத்துங்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கலாச்சார மையம் கட்ட தடை கோரிய வழக்கு ஜூன் 3வது வாரத்துக்கு தள்ளிவைப்பு என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உரிய அனுமதிகளை பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அரசு பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்டு நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் மதிப்பு 26.78 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி கோவில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணை வந்த நிலையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.