இன்று மதியம் மியான்மர் நாட்டின் சாகெய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவில், 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியின் அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து 12 நிமிடங்கள் கழித்து, சாகெய்ங் நகரின் தெற்கே 18 கி.மீ தொலைவில் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கங்களால் மியான்மரில் பல்வேறு இடங்களில் சாலைகள் உடைந்து பள்ளம் ஏற்பட்டு, கட்டடங்கள் தகர்ந்து விழுந்துள்ளன. குறிப்பாக, டௌங்கோ நகரில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் ரயில், மெட்ரோ போன்ற போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், நகரின் வடக்குப் பகுதியில் அரசின் 30 மாடி அலுவலகக் கட்டடம் சில நொடிகளில் தரைமட்டமாகியது. அதில் சிக்கியிருந்த 43 பேரின் நிலைமையைப் பற்றிய தகவல் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.