இந்த நிலநடுக்கங்கள் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகி, அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ஒன்றிரண்டாக மண்ணில் இரண்டாகி விழுந்துள்ளன. சில வினாடிகளில் கட்டடங்கள் தரைமட்டமானதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நிலநடுக்கத்துக்கு முன் சில கட்டிடங்களில் எச்சரிக்கை ஒலி ஒலித்ததால் மக்கள் உடனடியாக வெளியேறியதன் காரணமாக, உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாங்காக்கில் மெட்ரோ மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் நிலநடுக்கம் இரண்டு முறை பதிவாகியிருந்தது. முதல் அதிர்வு ரிக்டர் அளவையில் 7.7 ஆகவும், இரண்டாவது 6.4 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு இந்தியாவின் வடமாநிலங்கள், வங்கதேசம், சீனா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.
பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த உயரமான கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் அந்த இடத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மியான்மரில் அமைந்திருந்த ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.