மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவையில் 7க்கும் மேல் பதிவாகியிருப்பதால், மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. முதல் கட்ட தகவலின்படி, குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விரு நாடுகளும் உயிர்சேதத்திற்கும், பொருட்சேதத்திற்கும் கடுமையாக பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது. இந்த கஷ்டமான தருணத்தில், மியான்மர் மற்றும் தாய்லாந்து மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுகுறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கேள்விப்பட்டு கவலை அடைகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பிற்காகவும் நல்வாழ்விற்காகவும் பிரார்த்திக்கிறேன். இந்தியா எந்தவொரு தேவையான உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசுகளுடன் தொடர்ந்து இணைந்திருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.