பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னையில் திடீர் கைது.. என்ன காரணம்?

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (11:50 IST)
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் திடீரென சற்றுமுன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவின் பிற மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தமிழகம் உள்பட சில மாநிலங்களில் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு கடும் போராட்டம் நடத்தி வருகிறது.
 
இந்த சூழலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக "சம கல்வி, சம மக்கள் உரிமை" என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து கையெழுத்து பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இன்று எம்ஜிஆர் நகரில் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்ட போது, இந்தி மொழிக்கு ஆதரவாக மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறு கையெழுத்து இயக்கம் நடத்த காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை. இதனை அடுத்து, காவல்துறையினர் தமிழிசை சௌந்தரராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதன் தொடர்ச்சியாக, காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்றபோது, அவர் வாகனத்தில் ஏற மறுத்ததாகவும், அரை மணி நேரமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்