ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் குமார் என்பவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் போலீசில் புகார் அளித்தார். அதில், மர்மமான எண்ணில் இருந்து ஒருவர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், தினமும் மூன்று லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதை நம்பிய அவர், குறித்த நபர் சொன்ன வங்கி கணக்கிற்கு 94 லட்சம் ரூபாய் அனுப்பியதோடு, பின்னர் மோசடியில் விழுந்தது தெரிந்தது. இதன் அடிப்படையில், அவர் போலீசில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த புகாரை அடிப்படையாக கொண்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, சுதீர் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த பல் டாக்டர் ஆனந்த் சோனியும் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் நடந்த விசாரணையில், இந்த இருவரும் சேர்ந்து பல்வேறு பெயர்களில் வங்கி கணக்குகள் தொடங்கி, 16 மாநிலங்களில் 51 சைபர் மோசடிகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 10 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்திருப்பது அம்பலமானது.
தற்போது, இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மோசடி செய்யப்பட்ட தொகை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.