நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி 247 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
இந்திய அணியின் இந்த இமாலய வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் அபிஷேக் ஷர்மாவின் அபாரமான மெய்சிலிர்க்க வைக்கும் இன்னிங்ஸ்.அவர் நேற்று மைதானத்தில் வான வேடிக்கைக் காட்டினார். மைதானத்தின் 360 டிகிரியிலும் பந்துகளைப் பறக்கவிட்ட அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250.
இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசிய இங்கிலாந்து அணிக் கேப்டன் ஜோஸ் பட்லர் “டி 20 தொடரை இழந்தது வருத்தமாகதான் உள்ளது. இந்திய அணி தற்போது உள்நாட்டில் மிகச்சிறந்த அணியாக உருவாகியுள்ளது. நான் பார்த்து வியந்த டி 20 இன்னிங்ஸ் அபிஷேக் ஷர்மாவுடையதுதான். எங்கள் அணியின் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் ஒரு பாடமாக அமையும்” எனக் கூறியுள்ளார்.