இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவித்தார்.
ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 10 கட்சிகள், கடந்த சில காலமாகவே சுயாதீனமாக செயற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
இந்த 10 கட்சிகளை சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொடர்ச்சியாகவே அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு செயற்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படவுள்ளதாக அவர் கூறுகின்றார்.
இதேவேளை, ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்தை விட்டு வெளியேறி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இன்று காலை அறிவித்திருந்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இதன்படி, ஆளும் தரப்பைச் சேர்ந்த 18 பேர் இன்று முதல் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.