சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமிய மக்களை தவறாக சித்தரிப்பதாக பல அமைப்புகள் அந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்தின. ஆனாலும் படம் பல மாநிலங்களில் வெளியானது. சில மாநிலங்களில் மட்டும் தடை செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் ஒரு நாள் மட்டுமே ஓடியது. அடுத்த நாள் முதல் திரையரங்குகளே அந்த படத்தை திரையிடவில்லை. மேற்கு வங்க அரசும் இந்த படத்துக்கு தடை விதித்தது.
இந்நிலையில் மே 12 ஆம் தேதி பல நாடுகளில் ரிலீஸான இந்த படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படம் இப்போது வரை 170+ கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாகவும், விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய கமல்ஹாசன் “தி கேரளா ஸ்டோரி போன்ற பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே இது உண்மைக் கதை போட்டால் அது உண்மையாகிவிடாது. இந்த படத்தில் சொல்லப்பட்டு இருப்பது உண்மையில்லை.” எனக் கூறியிருந்தார். இதே கருத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்போது இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள இயக்குனர் சுதிப்டோ சென், “இதுபோன்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதை இப்போது நிறுத்திவிட்டேன். படத்தை பார்க்காமலேயே சிலர் விமர்சனம் செய்கிறார்கள். படம் பார்த்தவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான முன் முடிவுகள் இருக்கின்றன.” எனக் கூறியுள்ளார்.