ஓரினச்சேர்க்கை சர்ச்சை – வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை !

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (12:41 IST)
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல் ஷனனுக்கு 4 போட்டிகளில் விளையாடத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 232 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கேப்ரியல் ஷனன், பேட் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை நோக்கி கேலி செய்யும் விதமாகப் பேசியுள்ளார். அப்போது ஓரினச்சேர்க்கைக் குறித்த இழிவான சில வசைகளையும் அவரிடம் கூறியுள்ளார். அதற்கு நிதானமாக பதிலளித்த இங்கிலாந்து கேப்டன் ரூட் ‘ஓரினச்சேர்க்கை ஒன்றும் கேவலமான விஷயம் இல்லை. அதனைக் கேலி செய்யாதீர்கள்’ எனக் கூறினார்.

இதில் ஜோ ரூட் சொன்ன விஷயம் ஸ்டம்ப் மைக்குகளில் தெளிவாகக் கேட்டுள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் கேப்ரியல் என்னக் கூறினார் என்பது மைக்கில் கேட்கவில்லை. இது தொடர்பாக போட்டி நடுவர்கள் கேப்ரியலிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேப்ரியல் தான் தவறாகப் பேசியதை ஒத்துக்கொண்டுள்ளார். அதனால் அவருக்கு அடுத்து வரும் நான்குப் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. மேலும் அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 75%  பிடிக்கப்பட்டுள்ளது.

கேப்ரியல் மீதான் இந்த நடவடிக்கை ஐசிசி விதிகள் 213 -ன் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாகும். இந்த விதியின் படி ஒரு வீரர், அவரின் உதவியாளர், நடுவர், போட்டியின் மூன்றாவது நடுவர் ஆகியோரைச் சர்வதேச போட்டிகளில் தகாத வார்த்தைகளி்ல் திட்டுவது தண்டனைக்குரியதாகும். கேபரியல் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக இதுபோல விதிகளை மீறி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரினச்சேர்க்கை உலகம் முழுவதும் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்து வரும் சூழ்நிலையில் பலக் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கும் கிர்க்கெட் போட்டியில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது வருத்தத்திற்குரியது. வீரர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாமல் மாறிவரும் உலகத்தைப் புரிந்து கொண்டு தனிமனித சுதந்திரம் மற்றும் தேர்வுகளை இழிவுப்படுத்தக்கூடாது எனக் குரல்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்