நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில், சென்னை அணி தோல்வியடைந்தது. இது சென்னை அணிக்கு நான்காவது தொடர் தோல்வி என்பதால், ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இருப்பினும், நேற்றைய போட்டியில் தோனி அபாரமாக மூன்று சிக்சர்கள் அடித்தது, ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஆர்யா அபாரமாக விளையாடி 103 ரன்கள் அடித்தார். இதனைத் தொடர்ந்து, இருபது ஓவர்களில் அந்த அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து, 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. தொடக்கம் நன்றாக இருந்தாலும், அதன் பின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. கான்வே 69 ரன்கள், ஷிவம் துபே 42 ரன்கள் அடித்தனர். தோனி 27 ரன்கள் எடுத்தார். அதில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கம்போல் ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஏமாற்றியதுடன், கேப்டன் ருத்ராஜ் ஒரே ஒரு ரன் எடுத்து அவுட்டாகி திரும்பினார்.
மொத்தத்தில், நேற்றைய போட்டியில் ருத்ராஜ், ஜடேஜா, விஜய் சங்கர் ஆகியோர் கொஞ்சம் பொறுப்புடன் விளையாடியிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இறுதியில், சென்னை அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்ததால், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனை அடுத்து, நான்கு தொடர் தோல்விகளை சிஎஸ்கே பெற்றுள்ளது. தற்போது, கிட்டத்தட்ட கடைசி இடத்தில் புள்ளிப் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.