18 ஆண்டுகள் காத்திருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக் கோப்பையை வென்றது. ஆனால் அந்த சந்தோஷக் கொண்டாட்டத்தின் போது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆர் சி பி அணி நிர்வாகிகள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நகரின் மையத்தில் இருக்கும் சின்னசாமி மைதானத்தையே வேறு இடத்துக்கு மாற்றி விடலாமா என்ற அளவுக்கு விவாதங்கள் நடக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் புதிதாக மைதானம் உருவாக்குவது குறித்து கர்நாடக சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவின் பொம்மசந்திரா பகுதியில் சூர்யா சிட்டியில் 1650 கோடி ரூபாய் செலவில் 80,000 இருக்கைகளோடு இந்த மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லபடுகிறது. இந்த மைதானத்தோடு ஒரு விளையாட்டு வளாகமும் அமைக்கப்படவுள்ளது.