நேற்றைய MI vs RCB போட்டியில் ஆர்சிபி அணி பெற்ற மகத்தான வெற்றியில் க்ருணால் பாண்ட்யாவுக்கு முக்கிய பங்குண்டு.
என்னதான் RCB அணி 221 ரன்களை அடித்து மும்பைக்கு 222 ரன்கள் டார்கெட் வைத்திருந்தாலும், நேற்று MI இருந்த முனைப்புக்கு அது சேஸ் செய்யக்கூடிய ஸ்கோர்தான். 5வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் இணைந்த திலக் வர்மா - ஹர்திக் பாண்ட்யா இணை நின்றிருந்தால் மும்பைக்கு அது வெற்றி இலக்கு.
ஆனால் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், அந்த இடத்தில் சிறப்பாக செயல்பட்டு ஹெசில்வுட், புவனேஷ்குமார் போன்ற திறன்வாய்ந்த பவுலர்களை கொண்டு அந்த விக்கெட்டுகளை தூக்கினார். அதுவரையிலும் அந்த போட்டியில் ஆர்சிபி சுழற்பந்து வீச்சாளரான க்ருணால் பாண்ட்யா ஒரு விக்கெட்தான் வீழ்த்தியிருந்தார்.
அவரை கடைசி ஓவருக்கு பந்துவீச ஆர்சிபி அனுப்பியபோது ஆர்சிபி ரசிகர்களுக்கே கொஞ்சம் ஷாக்காகதான் இருந்தது. க்ருணால் கடைசி ஓவர் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவாரா என்ற சந்தேகம் இருந்தது. மேலும் க்ருணாலின் சுழற்பந்து தரையில் படும்போதே சாண்ட்னர் போன்ற சக பந்துவீச்சாளர்களால் அதன் திசையை உணர்ந்து எளிதாக அடித்து விட முடியும்.
ஆனால் அந்த இடத்தில் க்ருணால் தனது பந்துவீச்சிலேயே ஒரு மாற்றத்தை செய்தார். வெறும் சுழற்பந்தாக மட்டுமல்லாமல் வீசும் பந்தின் வேகத்தையும், கூட்டி வேக சுழற்பந்தாக நேராக ப்ளேயருக்கு வீசினார். தரையில் பட்டு வந்தால் யூகிக்க முடியும் பந்தை இப்போது யூகிக்காமல் பேட்ஸ்மேன் சுழற்றியாக வேண்டும். அந்த சுழற்றலில் விழுந்தது சாண்ட்னர் விக்கெட்.
க்ருணால் பாண்ட்யாவின் தம்பியான ஹர்திக் பாண்ட்யா (மும்பை இந்தியன்ஸ் கேப்டன்) தனது விக்கெட்டை இழந்தபோது சாண்ட்னரைதான் மலைப்போல நம்பியிருந்தார், சாண்ட்னர் விக்கெட் விழுந்ததுமே ஹர்திக் முகம் கடுகு வெடித்தது போல ஆகிவிட்டது. அதோடு தம்பியின் மெண்டல் ஹெல்த்தை விட்டாரா என்றால் இல்லை. அடுத்தடுத்து அதே ஓவரில் அதே பந்துவீச்சில் தீபக் சஹார், நமன் திர் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஒரு பக்கம் அண்ணன் க்ருணாலுக்கு ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்துக் கொண்டிருக்க தோல்வியின் விரக்தியில் தம்பி ஹர்திக் பாண்ட்யா சரிந்து உட்கார்ந்திருக்க அந்த காட்சியைதான் கிரிக்கெட் ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Edit by Prasanth.K