இன்று கந்தசஷ்டி திருவிழா நடைபெறும் நிலையில் திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை காண ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இன்று கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடந்த 25ம் தேதி கந்தசஷ்டி விழாவிற்கான யாசகசாலை பூஜை தொடங்கி தினம்தோறும் சிறப்பு நிகழ்வுகள் நடந்து வந்தன.
இன்று இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. முருகபெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வு சூரசம்ஹாரமாக கொண்டாடப்படுகிறது. இன்று மாலை 4 மணியளவில் சுப்பிரமணியர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருள்கிறார்.
இந்த சூரசம்ஹாரத்தை காண தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூர் நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர். கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை அனைவரும் காணும் வகையில் ஆங்காங்கே பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2,700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சூரசம்ஹாரத்தை காண வரும் பக்தர்கள் பயணிக்க நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.