வீடு கட்டுறதா சொன்னாங்க.. கடைசில பாத்தா டாஸ்மாக்! - மக்களுக்கே விபூதி அடித்த அதிகாரிகள்!

Prasanth Karthick

வியாழன், 3 ஏப்ரல் 2025 (11:11 IST)

வீடு கட்டுவதாக கூறி மக்களை ஏமாற்றி வீடு ஸ்டைலில் டாஸ்மாக் கடையை திறந்த சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி பட்டித்தொட்டி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் நிரம்பி வழிகின்றன. பல பகுதிகளில் மதுப்பிரியர்கள் டாஸ்மாக்கில் குடித்து விட்டு சாலைகளில் செல்லும் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் மக்கள் டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி போராட்டமே நடத்தும் அளவிற்கு நிலைமை உள்ளது.

 

அப்படியாக தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை பகுதியில் கடைவீதி மற்றும் நூலகம் அருகே செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதனடிப்படையில் சமீபத்தில் அந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

 

ஆனால் அதேசமயம், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் புதிதாக இரண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. அதுகுறித்து அப்பகுதி மக்கள் விசாரித்தபோது வீடு கட்டுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அந்த வீடுகள் கட்டி முடித்தும் அங்கு யாரும் குடிவரவில்லை. மேலும் வீடுகளுக்கு வைக்கப்படும் கதவுகள் வைக்காமல் அதற்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து கேட்டபோது இந்த இடத்தை குடோனாக பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளனர்.

 

ஆனால் அதற்கு பிறகு அந்த இரு கட்டிடத்திலும் டாஸ்மாக் என்று போர்டு வைத்ததோடு, உள்ளே மதுவகைகளையும் இறக்கி அடுக்கியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியில் உறைந்த மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களை சமாதானம் செய்ய முயன்ற அதிகாரிகள், டாஸ்மாக் வந்து செல்வதற்கு வேறு பாதை அமைக்கப்படும் என்றும், அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பில்லை என்றும் சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.

 

ஆனால் மக்களை வீடு கட்டுவதாக ஏமாற்றிவிட்டு டாஸ்மாக் கட்டியதால் அவர்கள் வாக்குறுதியை நம்ப முடியாது என்றும், அந்த டாஸ்மாக் கடைகள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் முறையிட்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்