ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ரூ.550 கோடி செலவில் புதிய ரயில் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் - ராமேசுவரம் பாம்பன் விரைவு ரயில் சேவை பற்றிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் பாம்பன் விரைவு ரயில் (16103), விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பரமக்குடி வழியாக பயணித்து மறுநாள் காலை 5.45 மணிக்கு ராமேசுவரம் அடையும். அதேபோல், ராமேசுவரத்தில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் ரயில் (16104), மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.
சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தாம்பரம் - ராமேசுவரம் இடையே பாம்பன் விரைவு ரயிலை இயக்க அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இதற்கமைய, பிரதமர் மோடியின் தலைமையில் ஏப்ரல் 6ஆம் தேதி இந்த சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.