தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்த செய்திகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில், வழக்கம் போல் பட்ஜெட்டை ஆளும் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் பாராட்டி வருகின்றன. அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளும், அவர்களின் கூட்டணி கட்சிகளும் குறை சொல்லி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் பட்ஜெட்டை பாராட்டிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்ஜெட்டில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "இது திமுகவினர்களுக்கு வேண்டப்பட்ட பட்ஜெட்" என்று விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது...
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக.