தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், "கடன் வாங்குவதில் திமுக அரசு சளைத்தது அல்ல" என பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
"95 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது பொய்" என்று அவர் குற்றஞ்சாட்டினார். 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்களுக்கு ஊதிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை என்றும், சமையல் நிர்வாகி சிலிண்டர் மானியம் ரூ.100 குறித்து அறிவிப்பு எங்கே? என்றும் கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்த வாக்குறுதி என்ன ஆனது? மாத்ந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி குறித்து அறிவிப்பு இல்லை என்றும், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும்" என்ற அறிவிப்பு எங்கே என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, "கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 3.5 லட்சம் கோடி ரூபாய் திமுக அரசு கடன் வாங்கியது. கடன் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல திமுக" எனவும், "புதிய திட்டங்களை எவையும் திமுக அரசு அறிவிக்கவில்லை" எனவும் விமர்சனம் செய்துள்ளார்.