டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 நிரப்ப முடியும்? ஈபிஎஸ் கேள்வி
தமிழக சட்டசபையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதனையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து, பட்ஜெட் குறித்த தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
அவர் கூறியதாவது: “அ.தி.மு.க. ஆட்சியில் 25 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு, மக்கள் பிரச்சனைகளை தீர்க்காமல், விளம்பர நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. முதல்வரும் துணை முதல்வரும் தங்களின் பிரசாரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
மேலும், “அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பெண்கள் விடுதி திட்டத்தைதான் தி.மு.க. அரசு தற்போது செயல்படுத்துகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதுவரை அதற்கான முழு விவரங்களை வெளிப்படுத்தவில்லை.
மேலும், 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவதாக கூறிய தி.மு.க. அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 57,000 பணியிடங்களையே நிரப்பியுள்ளது. ஒரே ஆண்டில் எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். டிஎன்பிஎஸ்சி-யில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,000 தான். எப்படி 40,000 பணியிடங்களை நிரப்ப முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.",