ராகுல் காந்திக்கு சப்போர்ட்; நிதியமைச்சர் மீது ரிப்போர்ட்! – சீமானின் கருத்தால் குழம்பிய தம்பிகள்!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (14:42 IST)
ராகுல் காந்தியின் செயல்பாடுகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேலி செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் நடை பயணமாகவே சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவ்வாறாக நடந்து சென்ற தொழிலாளிகளை நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த செயல்பாடு குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “புலம்பெயர் தொழிலாளிகளை சந்தித்து பேசுவதற்கு பதிலாக, அவர்களது மூட்டையை தூக்கி சென்று அவர்களுக்கு உதவலாமே” என கூறினார். நிதியமைச்சர் ஆணவத்துடன் பேசுவதாகவும், ராகுல்காந்தியை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேச்சு இருப்பதாகவும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினட் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “புலம்பெயர் தொழிலாளர்களுக்காகப் பேசுபவர்கள் அவர்களது மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு நடக்கட்டுமே? என கூறியிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு அதிகாரத் திமிரிலும், மக்களை சந்திக்காமல் பின்வாசல் வழியாக பெற்ற பதவி சுகம் தரும் ஆணவத் திமிரிலும் உமிழப்பட்ட நஞ்சாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை' எனும் உலகப் பொதுமறையோன் வள்ளுவப் பெரும்பாட்டனின் கூற்றையே எடுத்துரைக்கிறேன். உங்கள் ஆணவமும், அதிகாரமும் வீழ்ந்தொழியும் நாள் வெகுதொலைவில் இல்லை!” என்று கூறியுள்ளார்.

பொதுவாகவே காங்கிரஸ் கட்சி மீது எதிர்ப்புணர்வு கொண்ட தங்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தற்போது காங்கிரஸின் ராகுல் காந்தி சார்ந்த விவகாரத்தில் ஆதரவாக பேசும் வகையில் கருத்திட்டிருப்பது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எங்கும் தனது பதிவில் ஆதரவு மனநிலையோடு பதிவிடவில்லை என்றும், நிதியமைச்சரின் ஏதேச்சதிகார பேச்சை கண்டித்தே அவர் பதிவிட்டுள்ளதாகவும் சிலர் பேசிக்கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்