கர்நாடக மாநிலத்தில் 18 வயது கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்ள 20 வயது கல்லூரி மாணவர் வற்புறுத்தியதாகவும், ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கல்லூரி மாணவி கூறியதால் ஆத்திரத்தில் அந்த மாணவர், மாணவி மீது ஆசிட் வீசியதாகவும் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா என்ற மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவர் ஒருவர் அந்த பெண்ணிடம் பழகிய நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டதாக தெரிகிறது. ஆனால், திருமணத்திற்கு அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், கழிப்பறைக்கு பயன்படும் ஆசிட்டை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் வீசியதாகவும், இதனால் அந்த பெண்ணுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆசிட் ஊற்றிய கல்லூரி மாணவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர் தான் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும், கல்லூரி மாணவிக்கு பெரிய அளவில் காயங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஒரே கல்லூரியில் இருவரும் படித்து வருவதாகவும், இருவரும் தூரத்து சொந்தம் என்றும் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இருப்பினும், மாணவரின் திருமண கோரிக்கையை மாணவி ஏற்காததால் ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடந்தது என்றும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.