இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி என்ற தொகுதியில் பா.ஜ.க.வின் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட நடிகை கங்கனா ரணாவத் , ஒரு பக்கம் திரைப்படங்களிலும் நடித்து கொண்டே அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக, அவர் நடித்த 'எமர்ஜென்சி' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கங்கனா, அரசியல் வாழ்க்கை தனக்கு மகிழ்ச்சியாக இல்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் வித்தியாசமான சமூக சேவை என்றும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை, ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், சில சமயம் எம்.எல்.ஏ.க்களிடம் கூற வேண்டிய பிரச்சனைகள் எல்லாம் தன்னிடம் கொண்டு வருகிறார்கள் என்றும், மாநில அரசின் கீழ் வரும் பிரச்சனையை தான் எப்படி தீர்த்து வைக்க முடியும் என்றும், "உங்களிடம் இருக்கும் சொந்த பணத்தை செலவு செய்யுங்கள்" என்று தன்னிடம் கேட்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதமராக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, "அந்த பதவிக்கு நான் தகுதியுடையவளாக நினைக்கவில்லை என்றும், சமூகப் பணி பின்னணியைக் கொண்டவள் நான் அல்ல என்றும், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் ஒரு சுயநலமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன் என்றும்" அவர் தெரிவித்தார்.