போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

Mahendran

புதன், 9 ஜூலை 2025 (17:52 IST)
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னையில் பணி நிரந்தரம் வழங்கக் கோரி போராட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களைக் கைது செய்திருப்பதோடு 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ள திமுக அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
 திமுகவின் ஆட்சியில் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக்கூட அரசு ஊழியர்கள் முதல் பாமர மக்கள்வரை அனைவரும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் உண்மைநிலை. 
 
இந்நிலையில், நியாயமாக கிடைக்க வேண்டிய பணிநிரந்தரத்தைக் கேட்டு போராட முயன்ற ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது, போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவளித்ததும், ஆட்சிக்கு வந்தால் பணிநிரந்தரம் செய்யப்படும் என உறுதியளித்ததும், நான்காண்டு கால ஆட்சியில் மறந்துவிட்டதா? அல்லது கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு ஆசிரியர்கள் நலனை அலட்சியப்படுத்துவதுதான் திராவிட மாடலா?.
 
வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடத்தை தமிழக ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்பது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னதாக சென்னை ஓமந்துரார் பல்நோக்கு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர் 

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்