உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

Siva

புதன், 9 ஜூலை 2025 (16:48 IST)
இந்தியாவில் 23,000-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளும், ஆயிரக்கணக்கான தனியார் மருத்துவமனைகளும் இருப்பினும், உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்  பட்டியலில் வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகள் மட்டுமே இடம் பிடித்துள்ளன.
 
உலகின் மிகச்சிறந்த 250 மருத்துவமனைகளைப் பட்டியலிட்டுள்ள நிலையில் இதில் அமெரிக்கா அதிகபட்சமாக 45 மருத்துவமனைகளுடன் முதலிடத்தில் உள்ளது. முதல் 5 மருத்துவமனைகளில் நான்கு அமெரிக்காவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் ஜெர்மனியில் இருந்து 23 மருத்துவமனைகளும், தென் கொரியாவில் இருந்து 17 மருத்துவமனைகளும் அடங்கும்.
 
இந்தியாவில் இருந்து மூன்று மருத்துவமனைகள் மட்டுமே முதல் 250 பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவற்றில், இரண்டு அரசு மருத்துவமனைகள், ஒன்று தனியார் மருத்துவமனை.
 
சிறந்த மருத்துவமனைகளின் இந்தப் பட்டியல்  30 நாடுகளில் உள்ள 2,400 மருத்துவமனைகளின் தரவுகள் மற்றும் 85,000 மருத்துவ நிபுணர்களின் ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளன.
 
இந்திய மருத்துவமனைகளைப் பொறுத்தவரை, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) 113வது இடத்தில் உள்ளது. குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெதாந்தா தி மெடிசிட்டி (Medanta the Medicity) 166வது இடத்திலும், சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER) 246வது இடத்திலும் உள்ளன.
 
அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள மேயோ கிளினிக் (Mayo Clinic) உலகின் சிறந்த மருத்துவமனையாக முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக் (Cleveland Clinic) இரண்டாம் இடத்திலும், கனடாவின் டொராண்டோ பொதுப் பல்கலைக்கழக சுகாதார நெட்வொர்க் (Toronto General University Health Network) மூன்றாம் இடத்திலும் உள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்