நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிளுக்கு செல்லவிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்தில் அந்த பிளானை கேன்சல் செய்தார்.
கடந்த 16ந் தேதி வந்த கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன.
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர். 1000க் கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 50 க்கும் மேற்பட்ட மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். 1 லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்து மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களும், வாழை மரங்களும், பனை மரங்களும் வேரோடு சாய்துள்ளன. விவசாயிகள் கஷ்டப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கஜாவால் சீரழிந்து போயுள்ளன. பயிருக்காக வாங்கிய கடனை கட்ட சொல்லி வங்கியிலிருந்து வருவார்களே, அவர்களிடம் என்ன பதில் சொல்வது. வட்டிக்கு பணம் வாங்கிய இடத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் கதிகலங்கிப் போய் உள்ளனர்.
இந்த கஜா புயலால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும். சேதமடைந்த 56,942 குடிசை வீடுகளும் 30,328 ஓட்டு வீடுகளை சீர் செய்ய நிவாரண உதவி வழங்கப்படும். அதேபோல் சேதாரங்கள் கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருந்தார். இந்த பிளான் கடைசியில் கேன்சல் ஆனது. இதற்கு முக்கிய காரணம் மக்களின் தொடர் போராட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
பல இடங்களில் நிவாரணப் பொருட்கள் வழங்கவில்லை எனவும், மீட்புப் பணிகளை செய்ய அரசு அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை எனவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர் வந்த காரை மக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் ஆடிப்போன ஓ.எஸ்.மணியன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். மேலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நாம் அங்கு சென்றால் மக்கள் எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என எண்ணிய எட்ப்பாடி பழனிசாமி, பிரச்சனை சற்று ஓய்ந்த பிறகு செல்லலாம் என முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாளை மக்களை சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.