வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

Mahendran

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (14:09 IST)
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், அது இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வலுவிழந்து காணப்படுவதாகவும், ஆனால் அதே நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழெடுக்கும் சுழற்சி உருவாகி வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. மேலும், ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 14ஆம் தேதி முதல் மீண்டும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும், 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், 15ஆம் தேதி வெப்பநிலை சற்று குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
தமிழகத்தின் சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் நிலையில், பிற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்றும், சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை உயரக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
 
மேலும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்