ரஜினி எனும் நடிகரின் வரலாற்று பிழைகள்

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (14:06 IST)
முழுவதும் அரசியல்வாதியாக மாறிப்போன ரஜினியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். போர், புரட்சி, ஆன்மிக அரசியல், ஆத்மா, ஆன்மா என்பதெல்லாம் ரஜினியின் சமீபத்திய பிதற்றல்கள். தலைமைக்கு சற்றும் தகுதி இல்லாத ரஜினி, மாற்றம் பற்றிப் பேசுகிறார்.

 
ரஜினிக்கு ஒரு கேள்வி:
 
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்தான். மௌனப்புரட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்தான். களமும், காலமும் அமையும் போது தங்கள் தலைவரைத்   தேர்வு செய்வார்கள். ரஜினி சார்! உங்களுக்கு ஒரு கேள்வி. மக்கள் சிவாஜிக்கு தராத வாய்ப்பை MGR க்கு தந்தார்கள். ஏன் சிவாஜிக்கு வாய்ப்பு தரவில்லை? மக்களுக்கு நன்றாக தெரியும் யாரை எங்கு வைக்க வேண்டும் என்று? உங்களையும் எங்கு வைக்க வேண்டும் என்றும் கூட மக்களுக்கு நன்றாக தெரியும். 1996-களில் ஆச்சி மனோரமா நீங்கள் எல்லாம் வழிகாட்டியா என்று விமரிசனம் செய்தது எங்கள் நினைவுக்கு வருகிறது.
 
உங்கள் மௌனம், தமிழர்களின் வேதனைகள்
 
நேற்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கடந்த கால தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கிறீர்கள் . 1996-களில் இருந்து ஒவ்வொரு  மக்கள் பிரச்சனைகள் போதும் மக்கள் உங்கள் கருத்தை அறிய விரும்பினார்கள். ஆனால் பல பிரச்சனைகளில் மௌனம் எனும் கவசம் கொண்டு உங்களை நீங்கள் காத்து கொண்டீர்கள். யார் சார் நீங்க எங்களை ஆள?யாரிடம் மன்னிப்பு கோருகிறீர்கள்?. மூடிய அறையில் பத்திரிகையாளர்கள் மத்தியிலா? 
 
நீங்கள் மன்னிப்பு கோர வேண்டியது மக்கள் மத்தியில் பகிரங்கமாக !
 
ஈழம் பற்றி எரிந்த போது அதிர்ந்து பேசாதவர்தானே நீங்கள்

மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று தமிழர்களை அடித்து விரட்டிய பால் தாக்கரேவை கடவுளின் மறு உருவம் என்றீர்களே! 

காவேரிக்காக தமிழகம் திரண்டு எழுந்த போதும், கன்னட வெறியர்களால் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும், சற்றும் மனம் தளராமல் மௌனம் காத்தீர்களே!  

மண், இனம், பண்பாடு, காக்க நாங்கள் போராடிய போது உங்கள் நண்பர் மோடிக்கு சலாம் போட்டு கொண்டு இருந்தீர்களே!

அந்த கடந்த கால தவறுகளுக்காக மன்னிப்பு கோருகிறீர்களா?
 
வரலாறு எங்கும் உங்கள் மௌனம், தமிழர்களின் வேதனைகள். உங்களின் வரலாற்று பிழைகளே!  நீங்கள் மன்னிப்பு கேட்பது கூட, காலம் கடத்த சூரிய நமஸ்காரம் தான்.


இரா காஜா பந்தா நவாஸ்
Sumai244@gmail.com

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்