தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு பகுதி அருகே கல்லூரி மாணவி தர்ஷினி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அவரது பெற்றோர்களும் உறவினர்களும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்ஷினியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தர்ஷினியின் மரணத்திற்கு அவர் காதலித்த மாரி செல்வம் என்பவரே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தர்ஷினி உயிரிழப்பதற்கு முன் மாரி செல்வம் அவரது வீட்டிற்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், தர்ஷினி அணிந்திருந்த செயின் அறுந்துள்ளதாகவும், வீட்டில் இருந்த நகைகள் காணாமல் போயுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாரி செல்வம் தான் குற்றவாளி என்றும், அவரை கைது செய்யும் வரை தர்ஷினியின் உடலை வாங்க மாட்டோம் என்றும் கூறி பெற்றோர்களும் உறவினர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.